பணத் தகராறில் பயங்கரம் 11 முறை கத்தியால் குத்தி கள்ளக்காதலி கொலை பூக்கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை


பணத் தகராறில் பயங்கரம் 11 முறை கத்தியால் குத்தி கள்ளக்காதலி கொலை பூக்கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Nov 2020 4:48 AM IST (Updated: 20 Nov 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

சூரத்கல்லில் பணத் தகராறில் கள்ளக்காதலியை 11 முறை கத்தியால் குத்திக் கொன்ற பூக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

மங்களூரு, 
தட்சிணகன்னடா மாவட்டம் சூரத்கல் டவுனை சேர்ந்தவர் அசோக் பண்டாரி. இவரது மனைவி ரேகா பண்டாரி (வயது 36). இவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில் ரேகா தனது கணவரை பிரிந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பூக்கடை நடத்தி வரும் வசந்த் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி பணம் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மலர்ந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வசந்துடன், ரேகா குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இருவருக்கும் இடையே பணப் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

11 முறை கத்தியால் குத்தி காதலி கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் சூரத்கல் குலாய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு ரேகாவை, வசந்த் அழைத்து வந்துள்ளார். அப்போதும் அவர்களுக்குள் பணத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வசந்த், கத்தியால் ரேகாவை சரமாரியாக குத்தினார். இதில் ரேகாவின் வயிற்றில் 11 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து ரேகா பரிதாபமாக உயிரிழந்தார். இதைதொடர்ந்து வசந்த், அங்கேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சூரத்கல் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பணத் தகராறில் ரேகாவை குத்திக்கொன்று, வசந்த் தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கணவரை விட்டு பிரிந்த ரேகா, மகளுடன் கடந்த 17-ந்தேதி தான் வசந்துடன் வாடகை வீட்டில் குடியேறியதும், அதன் பின்னரே இந்த கொலை சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதைதொடர்ந்து கொலையான ரேகா, தற்கொலை செய்த வசந்த் ஆகியோரின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சூரத்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story