மேகமலையில் கனமழை: மண்சரிவால், மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறைகள் போக்குவரத்து துண்டிப்பு - சுற்றுலா பயணிகள் வர தடை


மேகமலையில் கனமழை: மண்சரிவால், மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறைகள் போக்குவரத்து துண்டிப்பு - சுற்றுலா பயணிகள் வர தடை
x
தினத்தந்தி 20 Nov 2020 9:46 AM IST (Updated: 20 Nov 2020 9:46 AM IST)
t-max-icont-min-icon

மேகமலையில் பெய்த கனமழை எதிரொலியாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் பாறைகள் உருண்டு மலைப்பாதையில் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

சின்னமனூர், 

தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் மேகமலை அமைந்துள்ளது. இது, வன உயிரின சரணாலயம் ஆகும். இங்கு இயற்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்டங்கள் கண்களை கொள்ளை கொள்ளும். சிறந்த கோடைவாசஸ்தலமாகவும், சுற்றுலாதலமாகவும் மேகமலை திகழ்கிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலமான கேரளா மற்றும் வெளிமாநில, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனைக்கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.81 கோடி மதிப்பீட்டில் தென்பழனி முதல் ஹைவேவிஸ் வரை மலைப்பாதையில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது பசுமை தீர்ப்பாயம் சாலை அமைக்க பல்வேறு விதிமுறைகளை அறிவித்து இருந்தது. ஆனால் பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை மீறி சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக மேகமலை வனப்பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது.

தொடர் கனமழை எதிரொலியாக, மேகமலை செல்லும் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது. மேலும் சாலையோரத்தில் இருந்த மரங்கள், தடுப்புகள் சரிந்து கிடக்கின்றன. சில இடங்களில் ராட்சத பாறைகள் உருண்டு மலைப்பாதையில் விழுந்தன. இதனால் மேகமலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மேகமலை வனப்பகுதியில் உள்ள 7 மலைக்கிராமங்களில் வசிக்கிற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தங்களது அன்றாட தேவைக்காக சின்னமனூர் வந்து செல்வது வழக்கம். மண்சரிவு மற்றும் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து கிடப்பதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது.

மேகமலையில் சாலை அமைக்கும் போது பசுமை தீர்ப்பாயம் சில விதிமுறைகளை அறிவித்து இருந்தது. அதன்படி வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அவை எளிதில் கடந்து செல்லும் வகையில் சாலையோரத்தை சரிவாக வெட்டவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் சாலை அமைத்தவர்கள் சாலையோரத்தை சரிவாக வெட்டாமல் செங்குத்தாக வெட்டி விட்டனர். இதனால் கனமழை பெய்யும்போது சாலையோரம் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுகிறது.

மேலும் வனவிலங்குகள் இடம்பெயர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தற்போது எங்களுக்கு சாலைவசதி ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இன்னும் தொடர்ந்து மழை பெய்தால் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு வனத்துறையினர் நேற்று முதல் தடை விதித்து உள்ளனர். மேலும் நெடுஞ்சாலைத்துறையினர் மேகமலைக்கு செல்லும் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைத்து வருகின்றனர்.

Next Story