ஊர்க்காவல் படையில் சேர கடும் போட்டி: 54 பணியிடங்களுக்கு 600 பேர் குவிந்தனர்
ஊர்க்காவல் படையில் சேர கடும் போட்டி நிலவியது. 54 பணியிடங்களுக்கு திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த தேர்வில் 600 பேர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்,
ஊர்க்காவல் படைக்கு திண்டுக்கல், பழனி உள்பட மாவட்டம் முழுவதும் 54 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் பெண்களுக்கு 10 பணியிடங்களும், ஆண்களுக்கு 44 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த காலிப்பணியிடங்கள் குறித்து மாவட்ட போலீஸ் நிர்வாகம் மூலம் ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊர்க்காவல் படைக்கான ஆட்கள் தேர்வு, திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது.
மதுவிலக்கு கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில் ஊர்க்காவல் படைக்கான ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. இதையொட்டி காலையில் இருந்தே ஆயுதப்படை மைதானத்தில் பட்டதாரிகள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் குவிய தொடங்கினர்.
அதையடுத்து ஊர்க்காவல் படை வட்டார தளபதி அழகப்பன் மற்றும் போலீசார் தேர்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பது, உயரம் கணக்கிடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பணி நடந்தது. இதில் 60 பெண்கள், 540 ஆண்கள் என மொத்தம் 600 பேர் கலந்து கொண்டனர்.
கொரோனா ஊரடங்கால் திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டதாரிகள், என்ஜினீயர்கள் என பல்வேறு தரப்பினர் வேலை இழந்துள்ளனர். இதன் காரணமாகவே ஊர்க்காவல் படைக்கு அறிவிக்கப்பட்ட 54 காலி பணியிடங்களுக்கான தேர்வில் 600 பேர் பங்கேற்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஊர்க்காவல் படையில் சேர விரும்புபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவராகவோ அல்லது தேர்ச்சி பெறாதவராகவோ இருக்க வேண்டும். பெண்கள் 155 சென்டி மீட்டரும், ஆண்கள் 165 சென்டி மீட்டரும் உயரம் இருக்க வேண்டும். மேலும் 20 வயது முதல் 45 வயதுடையவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு 5 நாட்கள் வேலை வழங்கப்படும். ஒரு நாளைக்கு ரூ.500 சம்பளமாக வழங்கப்படும். தற்போது இந்த பணியிடத்துக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு திண்டுக்கல், பழனி உள்பட மாவட்டம் முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள் என்றனர்.
Related Tags :
Next Story