குழந்தைகள் ஆன்லைனில் விளையாடுகிறார்களா? பெற்றோர் கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


குழந்தைகள் ஆன்லைனில் விளையாடுகிறார்களா? பெற்றோர் கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 20 Nov 2020 5:08 AM GMT (Updated: 20 Nov 2020 5:08 AM GMT)

குழந்தைகள் ஆன்லைனில் விளையாடுவதை தடுக்க பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம், 

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அந்த பாதிப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெற்றோர்கள் எவ்வாறெல்லாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டது. இந்த குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு குறும்படத்தை வெளியிட்டு பார்வையிட்டார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசியதாவது:-

வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் இணையவழி பயன்பாடுகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் பேராசை காரணமாக குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டு அதில் தாங்கள் வைத்திருந்த பணத்தை இழக்க நேரிடுவதால் மனஉளைச்சலுக்கு ஆளாகுவதுடன் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சமீப காலங்களில் ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்து அதன் விளைவாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

மேலும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக செல்போன்களை அவர்களிடம் கொடுப்பதுடன் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்காமல் இருப்பதால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதுடன் பொருள் இழப்பு மற்றும் விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுகிறது. பெற்றோர்கள், தாங்களும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருக்கவும், தங்கள் குழந்தைகளும் அதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்களா? என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள், காவல்துறைக்கு தங்களது முழு ஒத்துழைப்பை நல்கி குடும்ப நலன், குழந்தைகளின் நலனை காக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நல்லசிவம், ராதாகிருஷ்ணன், பாலச்சந்தர், சின்னராஜ், ராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், விநாயகமுருகன், ரேவதி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், விழுப்புரம் உட்கோட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story