காட்டுக்காநல்லூரில், மயக்க மாத்திரை கொடுத்து மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு - மூட்டுவலிக்கு சிகிச்சையளிப்பதாக கூறி நாடகமாடிய 2 பேருக்கு வலைவீச்சு


காட்டுக்காநல்லூரில், மயக்க மாத்திரை கொடுத்து மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு - மூட்டுவலிக்கு சிகிச்சையளிப்பதாக கூறி நாடகமாடிய 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Nov 2020 9:15 AM GMT (Updated: 20 Nov 2020 9:10 AM GMT)

மூட்டுவலிக்கு சிகிச்சையளிப்பதாக கூறி மூட்டிக்கு மயக்க மாத்திரை கொடுத்து 6 பவுன் நகையை பறித்துச்சென்ற ஆண், பெண் இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுக்காநல்லூர் மந்தைவெளி பஸ் நிறுத்த பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 75). இவரது மனைவி காசியம்மாள் (70). நேற்று காலை சுமார் 7 மணி அளவில் இவர்களது வீட்டுக்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணும், ஒரு பெண்ணும் மோட்டார்சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள் மூட்டு வலிக்கு சிகிச்சையளிப்பதாக, வீட்டில் இருந்த காசியம்மாளிடம் கூறிஉள்ளனர்.

இதை நம்பிய காசியம்மாள், அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் சென்றதும் அவர்கள் காசியம்மாளுக்கு மயக்க மாத்திரை கொடுத்து, மசாஜ் சிகிச்சை அளித்துள்ளனர். மசாஜ் செய்து கொண்டிருந்தபோது சிறிது நேரத்தில் காசியம்மாள் மயங்கி விட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காசியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்த காசியம்மாள், தனது கழுத்திலிருந்த நகையை அந்த மர்ம நபர்கள் பறித்துச்சென்றதை அறிந்து கூச்சலிட்டார்.

உடனடியாக இது குறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஆனால் 6 பவுன் நகையுடன் அந்த ஆணும், பெண்ணும் தலைமறைவாகி விட்டனர். அந்தப்பகுதியில் உள்ள கண்காப்பு கேமராக்களில் மர்ம நபர்கள் வந்து சென்றது பதிவாகி இருக்கிறதா என போலீசார் ஆய்வுசெய்து வருகின்றர். இந்த சம்பவத்தால் காட்டுக்காநல்லூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story