3 மகன்கள் அபகரித்த ரூ.1 கோடி சொத்துகளை மீட்டு முதியவரிடம் ஒப்படைப்பு - வேலூர் உதவி கலெக்டர் அதிரடி நடவடிக்கை
3 மகன்கள் அபகரித்த ரூ.1 கோடி சொத்துகளை மீட்டு அவர்களது தந்தையிடம் உதவி கலெக்டர் ஒப்படைத்து நடவடிக்கை எடுத்தார்.
வேலூர்,
வேலூர் காட்பாடி அருகே உள்ள பொன்னை கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகோபால் (வயது 82). இவரது மனைவி கோமளேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு கருணாகரன், வெங்கடேசன், வேல்முருகன் ஆகிய 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு ரேணுகோபால் தனக்கு சொந்தமான நிலம், வீடு, ரைஸ் மில் உள்ளிட்ட சொத்துகளை 3 மகன்களுக்கும் பிரித்து பாகப்பிரிவினை செய்து கொடுத்தார்.
சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட பிறகு மகன்கள் 3 பேரும் அவரை கவனிக்கவில்லை. சாப்பிடக்கூட உணவு கொடுக்காமல் அவர்கள் துன்புறுத்தியதோடு வீட்டை விட்டு விரட்டியதாகவும் கூறப்படுகிறது.
நல்ல முறையில் கவனிப்பதாக கூறி சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு தன்னை துன்புறுத்துவதாகவும், மகன்களிடம் இருந்து சொத்துகளை மீட்டு தர வேண்டும் என்றும் ரேணுகோபால் வேலூர் உதவி கலெக்டர் கணேஷிடம் கடந்த டிசம்பர் மாதம் மனு அளித்தார்.
அதன்பேரில் உதவி கலெக்டர் 3 முறை விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மகன்கள் சொத்துகளை அபகரித்துக் கொண்டு அவரை கைவிட்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து கலெக் டர் சண்முகசுந்தரத்தின் உத்தரவின் பேரில் மகன்களிடம் இருந்து சொத்துகளை மீட்டு ரேணுகோபாலிடம் மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ரேணுகோபால் தனது மகன்களுக்கு எழுதி கொடுத்த சொத்துகளுக்கான ஆவணத்தை ரத்து செய்து, உதவி கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான ஆணையையும் ரேணுகோபாலிடம் நேற்று வழங்கினார். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சொத்துகளை மீட்டு கொடுத்த உதவி கலெக்டருக்கு ரேணுகோபால் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story