தர்மபுரி மாவட்டத்தில் பசுமை வீடுகள் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் - ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் பசுமை வீடுகள் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா அறிவுறுத்தினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் பிரதாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் கிராமப்புற பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.42.89 கோடி மதிப்பில் 2,383 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது இந்த திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடுகள் கட்டும் பணியை விரைவுபடுத்த துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.228.24 கோடி மதிப்பில் 13 ஆயிரத்து 426 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.195.40 கோடி மதிப்பில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 832 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழக அரசின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.16.60 கோடி மதிப்பில் 458 ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதை கருத்தில் கொண்டு குடிமராமத்து திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இந்த ஆண்டில் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் தரமான முறையில் டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். வட்டார நாற்றுப் பண்ணைகளை அமைத்து பருவமழை பொழியும்போது செடிகளை நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கார்த்திகா பேசினார்.
இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ரங்கராஜன், வேதநாயகம், ஊராட்சி உதவி இயக்குனர் சீனிவாசசேகர், உதவி திட்ட அலுவலர்கள் செந்தில்குமார், உஷாராணி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story