உத்தனப்பள்ளி அருகே, சானமாவு காட்டிற்கு 30 யானைகள் வந்தன - விவசாயிகள் கவலை


உத்தனப்பள்ளி அருகே, சானமாவு காட்டிற்கு 30 யானைகள் வந்தன - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 20 Nov 2020 11:15 AM GMT (Updated: 20 Nov 2020 11:11 AM GMT)

உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு காட்டிற்கு 30 யானைகள் வந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ராயக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருகின்றன. ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரக்கூடிய இந்த யானைகள் சுமார் 4 மாதங்கள் இந்த பகுதியில் முகாமிட்டு விவசாய பயிர்களை நாசம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

கடந்த மாதம் 100 யானைகள் கர்நாடக வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக-கர்நாடக எல்லையான தளி அருகே வனப்பகுதிக்குள் வந்தன. அந்த யானைகளை வனத்துறையினர் தமிழக வனப்பகுதிக்குள் வராமல் இருப்பதற்காக தடுத்து வைத்து இருந்தனர். இதற்காக 20 பேர் கொண்ட வன குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டு இருந்தனர்.

மேலும் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு கல் போடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அதையும் மீறி 30 யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வந்தன. நேற்று முன்தினம் அந்த யானைகள் ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காட்டிற்கு வந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த யானைகள், சினிகிரிப்பள்ளி வனப்பகுதி வழியாக உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு காட்டிற்குள் நுழைந்தன.

தற்போது சானமாவு, பீர்ஜேப்பள்ளி, பென்னிக்கல், போடூர், ஆழியாளம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல், ராகி பயிரிட்டுள்ளனர். அறுவடை செய்ய கூடிய இந்த நேரத்தில் யானைகள் வந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சானமாவு காட்டில் இருந்த யானைகள் நேற்று மாலை ராயக்கோட்டை சாலையை கடந்து போடூர்பள்ளம் காட்டிற்கு வந்தன. உத்தனப்பள்ளி அருகே 30 யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

யானைகள் முகாமிட்டுள்ள வனப்பகுதியை சுற்றி உள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும், வீடுகளின் முன்பு விளக்குகளை எரிய விடுமாறும், இரவு நேரங்களில் நிலங்களில் யாரும் காவலுக்கு இருக்க வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story