நாமக்கல்லில் தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை - பெண்ணை கத்திமுனையில் மிரட்டிய முகமூடி ஆசாமிக்கு வலைவீச்சு


நாமக்கல்லில் தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை - பெண்ணை கத்திமுனையில் மிரட்டிய முகமூடி ஆசாமிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Nov 2020 12:00 PM GMT (Updated: 20 Nov 2020 11:48 AM GMT)

நாமக்கல்லில் தொழில் அதிபர் வீட்டில் புகுந்து பெண்ணை கத்திமுனையில் மிரட்டி, 40 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற முகமூடி ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 57). தொழில் அதிபர். கோழிப்பண்ணை நடத்தி வரும் இவர், கோழி மருந்து மொத்த விற்பனையாளராகவும், கோழி குஞ்சுகள் உற்பத்தியாளராகவும் இருந்து வருகிறார். இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேரும் தனித்தனி அறைகளில் படுத்து தூங்கினர்.

நள்ளிரவு நேரத்தில் வீட்டின் மொட்டை மாடி வழியாக, முகமூடி அணிந்தவாறு கீதா தூங்கி கொண்டு இருந்த அறைக்கு வந்த மர்ம ஆசாமி கத்திமுனையில் அவரை மிரட்டி, பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து உள்ளார்.

பின்னர் கீதா கழுத்தில் அணிந்து இருந்த நகைகள், கையில் போட்டு இருந்த வளையல் ஆகியவற்றையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டார். சிறிது நேரம் கழித்து கீதா, நடந்த சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதில் சுமார் 40 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் கொள்ளை நடந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் உள்ள அறை ஒன்றில் அங்கு வேலை பார்க்கும் 3 பெண்கள் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த அறையை கொள்ளையர்கள் வெளிபுறமாக பூட்டி விட்டதாக தெரிகிறது.

தொழில் அதிபர் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story