திருச்சி கே.கே.நகரில் மளிகைக்கடையில் திடீர் தீ விபத்து - ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
மளிகைக்கடையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
கே.கே.நகர்,
திருச்சி கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியில் இந்திரா மளிகை மற்றும் எண்ணெய் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மளிகை மற்றும் ஆயில் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடையின் உரிமையாளர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை மூடிய கடையில் இருந்து புகை வெளியே வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே இதுகுறித்து திருச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதற்குள் கடை முழுவதும் தீ மளமளவென பற்றி எரியத்தொடங்கியது.
தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கடையில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இருந்தாலும் கடையில் இருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள், எண்ணெய் போன்றவை எரிந்து நாசமானது. முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story