பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை: தோழி உள்பட 5 பேர் கைது
அருப்புக்கோட்டை அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில் அவரது தோழி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே உள்ள காந்திநகர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி ஜெயரூபா (வயது 33). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனது குழந்தைகளுடன் தனியாக இருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஜெயரூபாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வாயை பிளாஸ்ட்டால் ஒட்டி, கட்டி போட்டனர். பின்னர் ஜெயரூபாவின் கழுத்தில் இருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த நகை என மொத்தம் 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து ஜெய ரூபா அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா தலைமையில் தவமணி, பாலமுருகன், ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் விளக்கு நான்கு வழிச்சாலை அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அருப்புக் கோட்டையை சேர்ந்த பொன்ராஜ் மனைவி முத்துச்செல்வி (26), அருப்புக்கோட்டை நேரு மைதானத்தை சேர்ந்த கணேஷ் குமார் (24), வெள்ளைக் கோட்டை பகுதியை சேர்ந்த அருண் பாண்டி (24), பரவையை சேர்ந்த ஹரிஹரன் (20), அபிராமத்தை சேர்ந்த சோலைசாமி (26) ஆகியோர் என்பதும், ஜெயரூபாவை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் கணேஷ் குமாரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறி முத்துச்செல்வியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு தனது தோழியான ஜெயரூபாவின் வீட்டில் நகைகள் இருப்பதாகவும், அவர் தனியாக இருக்கும் போது கொள்ளையடித்து செல்லலாம் எனவும் முத்துசெல்வி தெரிவித்துள்ளார். அதன்படி கணேஷ்குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் அங்கு சென்று ஜெயரூபாவை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
Related Tags :
Next Story