ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ஓடையில் குளித்த 3 வாலிபர்கள் கதி என்ன? தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ஓடையில் குளித்த 3 வாலிபர்கள் கதி என்ன? தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்
x
தினத்தந்தி 20 Nov 2020 8:45 PM IST (Updated: 20 Nov 2020 8:40 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஓடையில் குளித்த 3 வாலிபர்கள் மாயமானார்கள். அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டார்களா என்று தீயணைப்பு துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் நீரோடைகள் வழியாக மழைநீர் வந்து அடிவாரத்தில் உள்ள கண்மாய்கள் நிரம்பி வருகிறது.

அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வாழைகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. தொடர்ந்து மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கண்மாய் மடை நேற்று காலை திறக்கப்பட்டது.

இதனால் கண்மாயில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேறி ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் தொடர் மழை காரணமாக மீன் வெட்டி அருவி, ராக்காச்சிஅம்மன் கோவில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு அருகே பேயனாறு ஓடையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த கோபி (வயது 20), பால்பாண்டி (21), ஈஸ்வரன் (22) ஆகியோர் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றனர். அங்கு குளித்துக் கொண்டிருந்த அவர்கள் 3 பேரும் திடீரென மாயமாகி விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மாயமாகிய 3 பேரையும் தேடி வருகின்றனர். அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டார்களா என தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர்.

Next Story