மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகப்பட்டதால் தாக்குதல்: வக்கீல் குமாஸ்தா தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி-மைத்துனர்கள் கைது + "||" + Suspicion of Behavior Attack: Lawyer clerk commits suicide by hanging - Wife-nephews arrested

நடத்தையில் சந்தேகப்பட்டதால் தாக்குதல்: வக்கீல் குமாஸ்தா தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி-மைத்துனர்கள் கைது

நடத்தையில் சந்தேகப்பட்டதால் தாக்குதல்: வக்கீல் குமாஸ்தா தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி-மைத்துனர்கள் கைது
நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் தாக்கியதில் மனம் உடைந்த வக்கீல் குமாஸ்தா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் மைத்துனர்களை போலீசார் கைது செய்தனர்.
திருமக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ஜெயகாந்தன்(வயது 37). இவர், வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவிகா(32). இவர், மன்னார்குடி அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு 11 வயதில் ஜெகன் என்ற மகன் உள்ளார். ஜெயகாந்தன் தனது மனைவி மற்றும் மகனுடன் மன்னார்குடி 6-ம் நம்பர் வாய்க்கால் அருகில் வசித்து வந்தார்.

தேவிகா, அடிக்கடி வெளி நபர்களிடம் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போனுக்கு நிறைய ஆபாச படங்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ஜெயகாந்தன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஜெயகாந்தனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே மனஸ்தாபம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று தேவிகா போனில் யாருடனோ பேசியதைப் பார்த்த ஜெயகாந்தன் அவரை கண்டித்துள்ளார்.

இதுகுறித்து தேவிகா பனையூர் கிராமத்தில் உள்ள தனது சகோதரர்களான ஆனந்த முருகேசன்(42), முரளிதரன்(25) ஆகியோருக்கு தகவல் தெரிவித்து தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது தேவிகா மற்றும் தேவிகாவின் சகோதரர்கள் ஜெயகாந்தனிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றியதில் தேவிகாவும், அவரது சகோதரர்களும் சேர்ந்து ஜெயகாந்தனை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான ஜெயகாந்தன் தனது மனைவியுடன் கோபித்துக்கொண்டு தனது சொந்த ஊரான புதுக்குடி கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தார்.

அங்கு வந்த அவர், தனது வீட்டின் கொல்லைப்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெயகாந்தனின் தந்தை தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருமக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ஜெயகாந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஜெயகாந்தன் தனது கைப்பட எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதை கைப்பற்றி போலீசார் படித்து பார்த்தனர். அதில், தனது சாவிற்கு தனது மனைவியும், அவரது சகோதரர்களுமே காரணம் என எழுதப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேவிகா மற்றும் அவரது சகோதரர்கள் ஆனந்த முருகேசன், முரளிதரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.