நாகையில் வேளாண் அமைச்சுப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாகையில் வேளாண் அமைச்சுப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2020 2:45 PM GMT (Updated: 20 Nov 2020 3:28 PM GMT)

நாகையில் வேளாண் அமைச்சுபணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் உள்ள மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர் சங்க மாநில செயலாளர் சுதாகர் கலந்து கொண்டு பேசினார்.

புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் உருவாக்கப்பட்ட நிலையில் ஆட்சி அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு அமைச்சுப்பணியிடம் உருவாக்க வேண்டும்.

வேளாண்மை பொறியியல் துறையில் அமைச்சுப்பணியாளர்களின் மாறுதல்களில் சீரான நடைமுறை பின்பற்றப்படுவது இல்லை. மண்டலத்தில், மாவட்டத்தில் மாறுதல் வழங்குவதில் குழப்பம் உள்ளது. எனவே மாறுதல்களில் ஒரே சீரான நடைமுறையை நிரந்தரமாக கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் வட்ட பொறுப்பாளர் சீனிவாசராவ் நன்றி கூறினார்.

Next Story