மாரியம்மன் கோவில் நிலத்தில் பயிற்சியில் ஈடுபட முயன்ற போலீசாரை முற்றுகையிட்ட கிராம மக்கள் - வீரபாண்டியில் பரபரப்பு
திருப்பூர் வீரபாண்டியில் மாரியம்மன் கோவில் நிலத்தில் பயிற்சியில் ஈடுபட முயன்ற போலீசாரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீரபாண்டி,
திருப்பூர் ஆண்டிபாளையத்தில் 200 ஆண்டு பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 2 வாரம் நடைபெறும். இந்த திருவிழாவை ஆண்டிபாளையம் சின்னாண்டிபாளையம், சின்னகவுண்டன்புதூர், குள்ளே கவுண்டன்புதூர், குளத்தூர்புதூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொண்டாடுவார்கள்.
இந்த கோவிலுக்கு சொந்தமாக 11.16 ஏக்கர் நிலம் கோவில் அருகில் உள்ளது. இந்த இடத்தில்தான் கோவில் திருவிழாவின்போது பக்தர்கள் கூடுவார்கள். இந்த நிலையில் அறநிலையத்துறையினர்,கோவிலுக்கு சொந்தமான நிலம் 11.16 ஏக்கரில் 9 ஏக்கர் நிலத்தை, கோவில் திருவிழாவை நடத்தும் 5 கிராமங்களை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிவிக்காமல் போலீஸ் துறைக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவரம் பொதுமக்களுக்கு தெரியவரவும், கோவில் நிலத்தை போலீஸ் துறைக்கு வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த 3 மாதங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் ஆண்டிபாளையம் கோவில் நிலத்தில், மாநகர போலீசார் பயிற்சியில் ஈடுபட முயற்சி செய்தனர். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென்று முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் மற்றும் தெற்கு உதவி கமிஷனர் நவீன் குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான இடத்தில் யாரும் வரக்கூடாது என்று தொடர்ந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். 2 மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு நாளை (இன்று) திருப்பூர் போலீஸ் கமிஷனர், கலெக்டர், ஆர்.டி.ஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஆண்டிபாளையம் பகுதியில் காலை முதலில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story