சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது சிறை விதிகளின் படியே சசிகலா விடுதலை செய்யப்படுவார்


சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது சிறை விதிகளின் படியே சசிகலா விடுதலை செய்யப்படுவார்
x
தினத்தந்தி 20 Nov 2020 10:57 PM GMT (Updated: 20 Nov 2020 10:57 PM GMT)

சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது என்றும், சிறை விதிகளின் படியே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்றும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10.10 கோடி அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறியது. ஆனால் அவர்களை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சொத்து குவிப்பு வழக்கில் தனிக்கோர்ட்டு விதித்த தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சசிகலா அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும், அபராத தொகை ரூ.10.10 கோடியை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதையடுத்து, சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10.10 கோடி அபராத தொகை கடந்த 18-ந் தேதி தனிக்கோர்ட்டு பதிவாளரிடம் சசிகலாவின் வக்கீல்கள் வழங்கினர்.

சசிகலா முன்கூட்டியே விடுதலை?

அபராத தொகை முழுவதையும் சசிகலா சார்பில் செலுத்தி இருப்பதால் பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று அவரது வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறி வருகிறார். அதாவது நன்னடத்தை அடிப்படையில் சசிகலா எந்த நேரமும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. ஆனால் சிறை விதிகளின்படி ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு விடுமுறை நாட்கள் பொருந்தாது என்றும், அதனால் அவர் முன்கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பில்லை என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சசிகலா முன்கூட்டியே விடுதலை விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று கர்நாடக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சிறப்பு சலுகைகள் கிடையாது

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் கோர்ட்டு விதித்துள்ள அபராத தொகை செலுத்தப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு, நீதிபதியின் உத்தரவை மாநில அரசு பின்பற்றும். கர்நாடக சிறைத்துறைக்கு என்று விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகளின் படியே அவர் விடுதலை செய்யப்படுவார். அவருக்கு என்று சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது. கோர்ட்டு உத்தரவின்படியும், சட்டப்படியுமே சசிகலா விடுதலை குறித்து சிறை நிர்வாகம், கர்நாடக அரசும் முடிவு எடுக்கும்.

மந்திரிசபை விரிவாக்கம் செய்வதா? அல்லது மாற்றியமைப்பதா? என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தான் முடிவு எடுப்பார். கூடிய விரைவில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும். யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பதை முதல்-மந்திரி எடியூரப்பாவே தீர்மானிப்பார். மந்திரிசபை விரிவாக்கம் விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story