கணவரை பிரிந்து வசித்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை பெண் உள்பட 3 பேரிடம் விசாரணை


கணவரை பிரிந்து வசித்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை பெண் உள்பட 3 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 21 Nov 2020 4:30 AM IST (Updated: 21 Nov 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

தையல்கடைக்காரருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி கொடுமைப்படுத்தியதால், கணவரை பிரிந்து வசித்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகல்கோட்டை,

பாகல்கோட்டை புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கடனகேரி கிராமத்தில் வசித்து வருபவர் யரண்ணா. இவர் அப்பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். யரண்ணாவின் மனைவி லதா. இந்த நிலையில் தையல் கடைக்கு வரும் பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி யரண்ணாவிடம், லதா அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பீலகி தாலுகா கோவள்ளி கிராமத்தை சேர்ந்த சங்கீதா (வயது 23) என்பவர், யரண்ணாவின் தையல் கடையில் வேலைக்கு வந்து சேர்ந்து இருந்தார். சங்கீதா ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர் ஆவார். இந்த நிலையில் யரண்ணாவுக்கும், சங்கீதாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக லதா சந்தேகித்தார். இதுதொடர்பாக அவர் யரண்ணாவிடம், சங்கீதாவிடமும் அடிக்கடி தகராறு செய்து வந்து உள்ளார். மேலும் சங்கீதாவை, லதா அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும் தெரிகிறது. இதனால் சங்கீதா மனம் உடைந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கீதா தையல் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த லதா, தையல் கடையை அடைத்தார். மேலும் தையல் கடையின் அருகே வசித்து வரும் மக்களை அழைத்து எனது கணவர் யரண்ணாவும், சங்கீதாவும் கடைக்குள் உல்லாசமாக இருக்கிறார்கள். அவர்களை கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து தையல் கடையை திறந்து பார்த்த போது அங்கு சங்கீதா மட்டும் இருந்தார். யரண்ணா அங்கு இல்லை. இதனால் லதாவை, அப்பகுதி மக்கள் திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் லதா தன்னை அவமானப்படுத்துவதை நினைத்து மனம் உடைந்த சங்கீதா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த பாகல்கோட்டை புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்ததாக புகார்

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கணவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி லதா கொடுமைப்படுத்தி வந்ததாலும், அடிக்கடி தன்னை அவமானப்படுத்தியதாலும் மனம் உடைந்த சங்கீதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதற்கிடையே சங்கீதா தற்கொலை செய்யவில்லை என்றும், லதா தான் சங்கீதாவை கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டு இருப்பதாகவும் கூறி சங்கீதாவின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் லதாவையும், அவரது உறவினர்களான 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story