இன்னும் 3 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் முதல்-மந்திரி எடியூரப்பா உறுதி
இன்னும் 3 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறுவது உறுதி என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு முதல்-மந்திரியின் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமை தாங்கி, போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
3 நாட்களில் விரிவாக்கம்
மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக டெல்லிக்கு சென்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளேன். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுமா? அல்லது மாற்றி அமைக்கப்படுமா? என்பது தெரியவரும். இவற்றில் ஏதாவது ஒன்று நடைபெறுவது உறுதி. புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி கூடிய விரைவில் நடைபெறும். மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட்டால், மந்திரிசபையில் இருந்து நீக்கப்படும் மந்திரிகள் யார்? என்பது குறித்து 3 நாட்களுக்குள் பா.ஜனதா தேசிய தலைவர்கள் முடிவு செய்து அறிவிப்பார்கள்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் இருந்து இனிப்பு செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது அரசியல் செயலாளர் ரேணுகாச்சாரியா மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள், மாநில தலைவர் நளின்குமார் கட்டீலை சந்தித்து பேசியுள்ளனர். இதுபற்றி எனது கவனத்திற்கும் வந்தது. ஒரு கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், அந்த கட்சியின் மாநில தலைவரை சந்தித்து பேசுவதில் எந்த விதமான தவறும் இல்லை. அதற்கு புது விதமான அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story