10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி மாணவர் காங்கிரசார் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்


10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி மாணவர் காங்கிரசார் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2020 11:22 PM GMT (Updated: 20 Nov 2020 11:22 PM GMT)

10 சதவீத இடஒதுக் கீட்டை அமல்படுத்தக்கோரி புதுவையில் மாணவர் காங்கிரசார் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, 

புதுவையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரு வதற்கு வசதியாக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் முடிவு செய்து அதுதொடர்பான கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி அளிக்க மறுத்ததுடன் கோப்பினை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதிபெற மத்திய மந்திரிகளை சந்திப்பது என முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளில் அரசு தரப்பு இறங்கி உள்ளது.

ஊர்வலம்

இந்தநிலையில் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்காத கவர்னர் கிரண் பெடியை கண்டித்தும், மத்திய அரசு இடஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கக் கோரியும், காவலர் தேர்வினை நடத்தக் கோரியும் மாணவர் காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காராமணிக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளி அருகில் இருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.

ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலை அருகே வந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கேயே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாணவர் காங்கிரசாரின் போராட்டம் குறித்து அறிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கு விரைந்து வந்தார்.

நாராயணசாமி உறுதி

மாணவர் காங்கிரசாரிடம், 10 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மத்திய மந்திரிகளை சந்தித்து பேசி இருப்பதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். 

Next Story