பருவமழை நின்று விட்டதால் பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு
சில நாட்களாக பருவமழை பொழியாமல் நின்று விட்டதால், பூண்டியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்ட தண்ணீர், புழல் ஏரிக்கு மீண்டும் திறந்து விடப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் ஆகியவை சேமித்து வைக்கப்படுகிறது. இந்த தண்ணீர் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தேவைப்படும் போது திறந்து விடப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதியிலிருந்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு ஆரம்பத்தில் வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர், பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது வினாடிக்கு 2 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 10-ந் தேதி பூண்டியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. சராசரியாக வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மழை நீர் வரத்து அதிகமானது. இதன் காரணமாக பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு கடந்த 16-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது சில நாட்களாக பருவ மழை பெய்யாததால், நேற்று காலை பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
நேற்று காலை நீர்மட்டம் 29.51 அடியாக பதிவாகியது. ஆயிரத்து 628 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 570 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
Related Tags :
Next Story