கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் நெல், மரவள்ளிகிழங்கு பயிர்களை சேதப்படுத்தின


கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் நெல், மரவள்ளிகிழங்கு பயிர்களை சேதப்படுத்தின
x
தினத்தந்தி 21 Nov 2020 3:25 AM GMT (Updated: 21 Nov 2020 3:25 AM GMT)

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானைகள் நெல், மரவள்ளிகிழங்கு பயிர்களையும் சேதப்படுத்தின.

கூடலூர், 

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் தாலுகா பாடந்தொரை அருகே கைமா கொல்லி பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 2 காட்டு யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த யானைகள் அப்பகுதியில் பயிரிட்டுள்ள நெல், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தின. தொடர்ந்து அந்தப்பகுதியிலேயே முகாமிட்டு உள்ளது. பகல் நேரத்திலும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் அச்சத்துடன் இருக்கக் கூடிய நிலை நீடித்து உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது.

காட்டுயானைகள் ஊருக்குள் வந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களிடம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எங்கள் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. இதுதொடர்பாக புகார் தெரிவித்தாலும் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்ட எந்த நடவடிக்கை எடுப்பதில்லை.

இதனால் தினமும் விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. மேலும் அதற்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினாலும், எந்த பலனும் கிடைப்பதில்லை. எனவே காட்டு யானைகளை நிரந்தரமாக வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story