உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 390 பேர் கைது


உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 390 பேர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2020 9:16 AM IST (Updated: 21 Nov 2020 9:16 AM IST)
t-max-icont-min-icon

உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் உள்பட 390 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி, 

திருவாரூர் மாவட்டம், திருக்குவளையில் பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் தி.மு.க.வினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மாவட்ட பொறுப்பாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நகர செயலாளர் சுப்ராயலு, மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கென்னடி, காமராஜ், லியாகத்அலி, சண்முகம், நகர துணை செயலாளர் அபுபக்கர், விவசாய அணி துணை அமைப்பாளர் அசோகன் உள்பட 80-பேரை கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

சங்கராபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நேற்று மாலை சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்துவந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் உள்பட 50 பேரை கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் பழைய பஸ் நிலையம் நான்குமுனை சந்திப்பில் வடக்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட 100 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் அய்யனார், துணை செயலாளர் மேமாலூர் தணிகாசலம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சக்திவேல், ஒன்றிய பொருளாளர் கணேஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் உதயா, வக்கீல் இளங்கோவன், வினோத் ஏகாம்பரம் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

விழுப்புரம் மத்திய மாவட்டம் அரகண்டநல்லூரில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராயல் எஸ்.அன்பு தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அய்யப்பன், துணை அமைப்பாளர்கள் வெங்கடேசன், முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் தினகரன், அப்பு, அருள், சீனு, தனுசு, சேட்டு, அகமது ஷெரீப், காமராஜ் செந்தமிழ், விக்கி உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். சாலைமறியலில் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருக்கோவிலூரில் நகர தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் வக்கீல் தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், முன்னாள் துணை தலைவர் குணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story