அம்மூர் ஒழுங்குமுறை கூடம் முன்பு விவசாயிகள் திடீர் சாலை மறியல் - வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயியை அவதூறாக பேசிய வியாபாரியை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. அம்மூர் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் நெல்களை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று விவசாயி கொண்டுவந்த நெல்களை வாங்க வந்த வியாபாரி ஒருவர், விவசாயியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தங்களை அவதூறாகவும், அலட்சியமாகவும் பேசிய வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராணிப்பேட்டை- சோளிங்கர் சாலையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தீஸ்வரன், இருசப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளை அவதூறாக பேசும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரின் ஏலம் எடுக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சமாதானம் அடைந்த விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story