ஊத்தங்கரை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


ஊத்தங்கரை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Nov 2020 5:33 AM GMT (Updated: 21 Nov 2020 5:33 AM GMT)

ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊத்தங்கரை,

ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட படப்பள்ளி ஊராட்சி சரட்டூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் 2020-2021-ல் ஜண்டாமேடு, புலியூர் சாலை முதல் கஞ்சனூர் சாலை வரை ரூ.92 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்படுகிறது. இதேபோன்று படப்பள்ளியில் ரூ.6 லட்சத்தில் ஓரடுக்கு ஜல்லி மற்றும் தார்சாலை அமைக்கப்படுகிறது. படப்பள்ளி ஊராட்சி பெருமாள் குப்பத்தில் ரூ.2 லட்சத்தில் மழைநீர் சேகரிப்பு தனி நபர் நிலத்தில் மண் வரப்பு அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மிட்டப்பள்ளி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.8½ லட்சத்தில் கிராம நிர்வாக அலுவலகம், நூலகம், ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். வேளாண்மை உழவர் உற்பத்தியாளர் குழு திட்டத்தில் டிராக்டர் வாங்க ரூ.5 லட்சம் மானியத்திற்கான ஆணையை பயனாளிக்கு கலெக்டர் வழங்கினார்.

தோட்டக்கலைத்துறை சார்பாக நீர்வள மற்றும் நிலவள திட்டத்தின் கீழ் 2020-2021-ம் ஆண்டின் மஞ்சள் பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு ஒரு எக்டேருக்கு ரூ.12 ஆயிரத்திற்கான ஆணையை வழங்கினார். ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணையதளம் மூலம் படிவம் பதிவேற்றம் செய்யும் பணிகளை அவர் பார்வையிட்டார். போச்சம்பள்ளியில் வேளாண்மை துறை சார்பில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் காய்கறிகள் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துணை இயக்குனர் ஜெயராமன், தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்முருகன், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்னபூரணி, மகேஷ்குமரன், உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி, உதவி பொறியாளர்கள் பூம்பாவை, ஜமுனா, கூட்டுறவு சங்க தலைவர் தேவேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் சின்னதாய் மற்றும் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story