ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடையில் குளித்த போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 நண்பர்கள் பிணமாக மீட்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடையில் குளித்த போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 நண்பர்கள் பிணமாக மீட்கப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலை அடிவாரத்தில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.
தொடர் மழையால் பேச்சியம்மன் கோவில் ஓடை, பேயனாற்று ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் குளிக்க செல்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கோட்டமலையான் மகன் கோபி என்ற கோபி சங்கர் (வயது 20). பட்டதாரியான இவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகி வந்தார். இவருடைய நண்பர் லட்சுமணன் மகன் பால்பாண்டி (21). பட்டதாரியான இவர் டிரைவர் வேலை பார்த்து வந்தார். மற்றொரு நண்பர், சின்னகுட்டி மகன் முத்து ஈஸ்வரன் (22).
இவர்கள் 3 பேரும் மம்சாபுரம் பகுதியில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் அருகே பேயனாற்று ஓடைக்கு குளிக்க சென்றனர். அந்த ஓடையில் மழைநீருடன், காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் தண்ணீரில் ஒருவர் பின் ஒருவராக அடித்து செல்லப்பட்டனர். தங்களை காப்பாற்றும்படி அவர்கள் அலறினர். உடனே அங்கிருந்த மற்றவர்கள் இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள்3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை அந்த ஓடையில் இருந்து சிறிது தூரத்தில் பால்பாண்டி, முத்து ஈஸ்வரன் ஆகியோரின் உடல்கள் பாறையின் இடுக்குளில் இருந்து மீட்கப்பட்டன. தொடர்ந்து தேடும் பணி நடந்தது.
அடுத்து 3 மணி நேரம் கழித்து கோபியின் உடலும் மீட்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கி பலியான 3 பேரின் உடல்களும் மம்சாபுரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் அவர்களது உடல்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பலியான வாலிபர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். வெள்ளத்தில் சிக்கி 3 நண்பர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேயனாற்று ஓடையில் 3 நண்பர்கள் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்கள். இதில் ஒருவர் கோபி. இவர் வெள்ளத்தில் சிக்கிய காட்சியை அந்த பகுதியில் நின்றிருந்த யாரோ ஒருவர் செல்போனில் சட்டென்று படம் எடுத்துள்ளார். வேகமாக பாய்ந்தோடும் தண்ணீரில் இழுத்துச்செல்லப்படும் கோபி, ஏதாவது மரக்கிளையையோ, பாறையையோ பிடித்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், வெள்ளத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர் தொடர்ந்து இழுத்துச் செல்லப்படுவது போன்று, இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சில வினாடிகள் ஓடும் இந்த வீடியோ காட்சி, தற்போது வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story