கோவில்பட்டி, எட்டயபுரத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி, எட்டயபுரத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2020 10:15 PM GMT (Updated: 21 Nov 2020 5:22 PM GMT)

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை விளக்கி, கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்த விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்குஏ.ஐ.டி.யு.சி. காளிராஜ் தலைமை தாங்கினார். எல்.பி.எப். தொழிற்சங்கம் மாரிமுத்து, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் மோகன், டி.யு.சி.சி. தொழிற்சங்கம் செல்லத்துரை, பாண்டியன், சிவகுமார் ஆகியோர் பேசினர். இதில் தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் திடலில் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. ஒருங்கினைப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சேது ஆகியோர் பேசினர்.

தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும், ஆட்டோ, வேன் டிரைவர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், கட்டுமானம், ஆட்டோ, தீப்பெட்டி உள்ளிட்ட முறை சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா கால நெருக்கடியில் இருந்து விடுபட மாதம் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும், விவசாயிகள் விரோத வேளான் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் முருகேசன், சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story