உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.3 கோடி தங்க நகைகள் சிக்கின - மும்பையை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது
பெங்களூருவில், உரிய ஆவணங்கள் இன்றி ஸ்கூட்டரில் எடுத்து சென்ற ரூ.3 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்க நகைகள் சிக்கியது. இதுதொடர்பாக மும்பையை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு,
பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக வேலை செய்து வருபவர்கள் ஆனந்த், அனுமந்த். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்தது. இதனை கவனித்த போலீஸ்காரர்கள் ஆனந்த், அனுமந்த் ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஸ்கூட்டரில் வந்த 2 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ்காரர்கள், ஸ்கூட்டரில் இருந்த ஒரு பையில் சோதனை நடத்தினர். அதில் குவியல், குவியலாக தங்கநகைகள் இருந்தன. இதனை பார்த்து போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, போலீஸ்காரர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், தங்கநகைகளை பார்வையிட்டனர். பின்னர் தங்கநகைகளுக்கு உரிய ஆவணங்களை கொடுக்கும்படி ஸ்கூட்டரில் வந்த 2 பேரிடமும் இன்ஸ்பெக்டர் கேட்டார். அப்போது அவர்கள் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்றும், சிக்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்ய செல்வதாகவும் கூறினார்கள்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த போலீசார், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாக கூறி அந்த பையில் இருந்த தங்கநகைகளை பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் அவற்றை போலீஸ் நிலையத்திற்கும் கொண்டு சென்றனர். முன்னதாக 2 பேரையும் போலீசார் கைது செய்து இருந்தனர். இதுதொடர்பாக கே.ஆர்.மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்கநகைகளை மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பாட்டீல் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கே.ஆர்.மார்க்கெட் போலீஸ்காரர்கள் ஆனந்த், அனுமந்த் ஆகியோர் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரில் இருந்த ஒரு பையில் பார்த்த போது, அதில் குவியல், குவியலாக தங்கநகைகள் இருந்தன. ஆனால் தங்கநகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதுகுறித்து ஸ்கூட்டரில் வந்தவர்களிடம் கேட்ட போது நகைக்கடைகளுக்கு சப்ளை செய்ய கொண்டு செல்வதாக கூறி உள்ளனர். அவர்கள் எங்கிருந்து நகைகளை கொண்டு வந்தனர்? எந்த நகைக்கடைக்கு கொண்டு சென்றனர் என்பது பற்றி தெளிவாக கூறவில்லை.
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததாக கூறி 65 தங்க நெக்லஸ்கள், 7 ஜோடி தங்க வளையல்கள், 150 கிராம் தங்க கம்மல்கள் என 6 கிலோ 55 கிராம் எடையுள்ள தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 கோடி ஆகும். இதுதொடர்பாக ஸ்கூட்டரில் வந்த மும்பையை சேர்ந்த தல்பத்சிங்(வயது 34), ராஜஸ்தானை சேர்ந்த விகாஷ்(35) ஆகியோரை கைது செய்து உள்ளோம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து வருமானவரித் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 6 கிலோ தங்கநகைகள் சிக்கிய சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story