திருவள்ளூரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் சிறப்பு முகாம் - மாவட்ட கலெக்டர் ஆய்வு


திருவள்ளூரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் சிறப்பு முகாம் - மாவட்ட கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Nov 2020 3:15 AM IST (Updated: 22 Nov 2020 1:14 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் நடைபெற்ற வாக்காளார் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் பெரியகுப்பம் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் அது தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அவர், ஒண்டிகுப்பம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் திருவள்ளூரை அடுத்த திருமழிசை சுந்தரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஆண்டர்சன் பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் திருவள்ளூர் தாசில்தார் விஜயகுமாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் தெற்கு துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி பார்வையிட்டார். இதன் பின்னர், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை பார்வையிட்ட அவர், முன்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த கடைகளை உடனடியாக அகற்றுமாறு வருவாய் ஆய்வாளர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியின் போது பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் தேன்மொழி, பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story