சிறுமி பாலியல் பலாத்கார வழக்குபோடுவதில் தாமதம்: திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் - போக்சோ சட்டத்தில் பெயிண்டர் கைது


சிறுமி பாலியல் பலாத்கார வழக்குபோடுவதில் தாமதம்: திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் - போக்சோ சட்டத்தில் பெயிண்டர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2020 3:30 AM IST (Updated: 22 Nov 2020 6:13 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதில் தாமதப்படுத்திய திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தில் பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

திருக்கனூர், 

திருக்கனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற பிரம்மன் (வயது 35), பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் இரவு அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை அங்குள்ள சவுக்குத் தோப்புக்குள் தூக்கிச்சென்றார். பின்னர் சவுக்கு மரத்தில் சிறுமியின் கைகளை கட்டி, வாயில் துணியை அடைத்து கார்த்திக் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பிக்க கடுமையாக போராடியதால் பலாத்காரம் செய்யும் முயற்சியை கைவிட்டு கார்த்திக் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் அந்த வழியாக சென்றவர்கள் சிறுமி மரத்தில் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுமியை மீட்டு அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே அன்று இரவு அதேபகுதியை சேர்ந்த கணவன் இல்லாத 40 வயதுடைய பெண்ணின் வீட்டின் கதவை தட்டி கார்த்திக் தகராறு செய்தார். ஆனால் கதவை திறக்க அந்த பெண் மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த கார்த்திக் கதவை உடைத்து அந்த பெண்ணை தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த சம்பவங்கள் குறித்து திருக்கனூர் போலீசில் முறையிடப்பட்டது. ஆனால் பெண் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மட்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும் சிறுமி பாலியல் பலாத்கார முயற்சி குறித்த விவகாரத்தை கிடப்பில் போட்டதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகனுக்கு புகார் சென்றது. அதன்பேரில் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ராவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து திருக்கனூர் போலீசார் கார்த்திக்கை செய்தனர்.

இந்தநிலையில் சிறுமி பாலியல் பலாத்கார முயற்சி விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய காலதாமதம் செய்ததாக திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக் குமார் நேற்று அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதுதொடர்பாக நள்ளிரவில் போலீஸ் தலைமையகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தற்காலிகமாக கூடுதல் பொறுப்பில் உள்ளார். சிறுமி பாலியல் பலாத்கார முயற்சி சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்வதில் அலட்சியம் காட்டியதாக சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story