கன்னட சங்கங்கள் சார்பில் 5-ந் தேதி முழுஅடைப்பு முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை - ‘வன்முறையில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’
கன்னட சங்கங்கள் சார்பில் வருகிற 5-ந் தேதி முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. “போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு, மராட்டிய மேம்பாட்டு கழகத்தை அமைத்துள்ளது.
இந்த மேம்பாட்டு கழகத்திற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் மராட்டிய மேம்பாட்டு கழகம் அமைப்பதை திரும்ப பெற வேண்டும் என்றும், அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும் கன்னட அமைப்புகள் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் மராட்டிய மேம்பாட்டு கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 30-ந் தேதிக்குள் அரசு தனது முடிவை திரும்ப பெற வேண்டும், இல்லையெனில் கர்நாடகத்தில் திட்டமிட்டபடி வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். ஆனால் முழு அடைப்புக்கு சில கன்னட அமைப்புகள் ஆதரவு அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், முழு அடைப்பு போராட்டம் குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;-
மராட்டிய மேம்பாட்டு கழகம் அமைக்க கூடாது என்று கூறி கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு முழு அனுமதி வழங்கப்படும். அதனை அரசு தடுக்க போவதில்லை. முழு அடைப்பை காரணம் காட்டி சட்டத்தை கையில் எடுத்தால், அதனை அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது. கன்னட அமைப்புகள் சார்பில் வருகிற 5-ந் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்பை கைவிடும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக என்னுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு கன்னட அமைப்புகளின் தலைவர்கள் வரட்டும்.
உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண நான் தயாராக இருக்கிறேன். அதனை விட்டு சட்டத்தை கையில் எடுத்து கொண்டும், வலுக்கட்டாயமாகவும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினாலோ, வன்முறையில் ஈடுபட்டாலோ, அரசு சும்மா இருக்காது. சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனது தலைமையிலான பா.ஜனதா அரசு கன்னடர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து வருகிறது.
மராட்டிய மேம்பாட்டு கழகம் அமைக்கும் விவகாரத்தில், என்னுடன் கன்னட அமைப்புகள் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும். தேவையில்லாமல் முழு அடைப்பு நடைபெற இருப்பதாக மக்களிடம் வதந்தி பரப்ப வேண்டாம். முழு அடைப்பு நடத்துவதாக கூறி வாகனங்களுக்கு தீவைப்பது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது, இதனை எல்லாம் நான் கவனித்து கொண்டு தான் வருகிறேன்.
சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதனை சகித்து கொண்டு அரசு இருக்காது. சாதி, மதம் அனைத்தையும் மறந்து அனைவரும் சமமானவர்கள் என்று பார்க்க வேண்டும். மராட்டிய மக்களின் வளர்ச்சிக்காக மட்டுமே இந்த மேம்பாட்டு கழகம் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story