சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
கடலூர் மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட வணிக சங்க நிர்வாகிகள், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் மண்டல கண்காணிப்பு குழுக்களுடன் கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு, ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. வணிகர்கள் தங்களது வணிக நிறுவனங்கள், மளிகை மற்றும் காய்கறி கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களை கண்டிப்பாக சமூக இடைவெளியை கடை பிடிக்க அறிவுறுத்த வேண்டும். வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனத்தில் பணிபுரிவோர் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் நடக்கும் போதும், வாகனத்தில் செல்லும்போதும், வாகனம் நிறுத்தும் இடத்திலும், பொருட்கள் வாங்கும் இடத்திலும் கண்டிப்பாக சமூக இடை வெளியை கடை பிடிக்க வேண்டும் என்பதை வணிகர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைகளை கழுவ கடையின் முன்பு கிருமி நாசினி வைக்க வேண்டும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு கைகளை கழுவ சோப்பு மற்றும் தண்ணீர் வைக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் போன்ற நடைமுறைகளில் தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். விழாக்காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் அதிகமாக மக்கள் கூட நேரிடும் இடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பொது இடங்களில் எச்சில் துப்புதல், சளி உமிழ்தல் போன்ற செயல்கள் கண்டறியப்படும் போது அபராத தொகை விதிக்கப்படும். ஆகவே வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் கண்டிப்பாக கொரோனா தொற்று பரவாமல் இருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மழைக்காலங்களில் நோய் தொற்று அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என்று கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செயல்பட்டு வரும் கண்காணிப்பு மண்டல குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், சப்-கலெக்டர்கள் மதுபாலன், பிரவின்குமார், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், மண்டல கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் வணிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story