கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதி சுப்பிரமணியசாமி கோவில்களில் - திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதி சுப்பிரமணியசாமி கோவில்களில் - திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 22 Nov 2020 3:56 AM GMT (Updated: 22 Nov 2020 3:56 AM GMT)

கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் பகுதி சுப்பிரமணியசாமி கோவில்களில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள ராஜகணபதி கோவில் வளாகத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சாமிக்கு வருடந்தோறும் கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து தினமும் பாலசுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

விழாவின் 6-வது நாளான நேற்று முன்தினம் காலையில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. மாலை 5 மணி அளவில் சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் வேல் ஏந்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் நேற்று காலை வள்ளி மற்றும் தெய்வானை, பாலசுப்பிரமணிய சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி காலை 9.30 மணிக்கு மேளதாளத்துடன் பக்தர்கள் சீர்வரிசை யோடு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் மேளதாளம் முழங்க, மந்திரங்கள் வாசிக்க சுப்பிரமணியசாமி, வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் வேத கோஷங்கள் முழங்க சிவசுப்பிரமணியசாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிளட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். யாக பூஜையை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story