ஆறகளூர் பெருமாள் கோவிலில் அழிந்துபோன சிவன் கோவிலின் கல்வெட்டு கண்டுபிடிப்பு


ஆறகளூர் பெருமாள் கோவிலில் அழிந்துபோன சிவன் கோவிலின் கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2020 4:31 AM GMT (Updated: 22 Nov 2020 4:31 AM GMT)

ஆறகளூர் பெருமாள் கோவிலின் அழிந்துபோன சிவன் கோவிலின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

தலைவாசல், 

தலைவாசல் அருகே ஆறகளூரில் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வு மைய தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

பெருமாள் கோவிலில் உள்ள கமல மங்கை நாச்சியார் சன்னதியில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகளை கண்டறிந்தோம். 12-ம் நூற்றாண்டில் ஆறகளூர், மகதை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. பொன் பரப்பின வாணகோவரையன் என்ற மன்னர் மகத நாட்டை ஆண்டு வந்தார். இவர் சோழ மன்னர் 3-ம் குலோத்துங்கனின் படைத்தளபதியாகவும், மகதையின் குறுநில மன்னராகவும் விளங்கினார். இவர் காலத்தில்தான் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவிலும், கரிவரதராஜ பெருமாள் கோவிலும் கட்டப்பட்டன.

ஆறகளூரில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே இந்து சமயஅறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடம் கைலாசநாதர் தோப்பு என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு சிவன் கோவில் இருந்து அழிந்து போனதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு ஒரு நந்தி சிலை இப்போதும் உள்ளது. இங்கிருந்த 6 சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டது. மேலும் இங்கிருந்து பைரவர் சிலை அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் சண்டிகேஸ்வரர் சிலை தேர்முட்டி அருகே உள்ள அகழ்பள்ளத்தில் தெற்கு கரையில் இன்றும் உள்ளது.

17-ம் நூற்றாண்டில் சிதைந்திருந்த சிவன் கோவிலில் இருந்த கற்களை பயன்படுத்தி கரிவரதராஜ பெருமாள் கோவிலின் உள்ளே கமலா மங்கை நாச்சியார் சன்னதி கட்டப்பட்டு உள்ளது. இதற்கு சான்றாக அந்த சிவன் கோவிலுக்கு பாண்டிய மன்னர் தானமளித்த கல்வெட்டு கமல மங்கை நாச்சியார் சன்னதியில் காணப்படுகிறது.

கமல மங்கை நாச்சியார் சன்னதியின் அர்த்த மண்டபத்தின் தென்புறம் உப பீடத்தில் உள்ள அந்த கல்வெட்டில் 4 வரிகள் இடம்பெற்றுள்ளன. கி.பி.1269-ம் ஆண்டு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சி காலத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதில் சந்திரன் உள்ளவரை தானம் நிலைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. வாணாதிதேவன் என்பவர் இக்கல்வெட்டை பொறித்துள்ளார். 400 ஆண்டுகள் கடந்தும் கமல மங்கை நாச்சியார் சன்னதி இன்றும் நல்ல நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story