சிவகங்கை அருகே வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டுகோள்


சிவகங்கை அருகே வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 Nov 2020 12:52 PM GMT (Updated: 22 Nov 2020 12:52 PM GMT)

சிவகங்கை அருகே வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

சிவகங்கை, 

சிவகங்கையை அடுத்த ஒக்கூர் ஊராட்சியில் பொது சுகாதாரத்துறையின் மூலம் களப்பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணிகளை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டார். அவர் ஒக்கூர் ஊராட்சியில் இந்திரா நகர் காலனி, புதுத்தெரு ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து இருக்கிறார்களா? என ஆய்வு செய்தார்.

அதோடு வீடுகளில் குடிநீர் பிடிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் டிரம்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகிறதா? என பொதுமக்களிடம் கலெக்டர் நேரில் விசாரித்தார். பிளாஸ்டிக் டிரம்களில் கொசுப்புழு இருக்கிறதா? எனவும் அவர் பார்வையிட்டார். பயன்பாடற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்கவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.

உடனடியாக சிகிச்சை

அது மட்டுமின்றி ஊராட்சி செயலாளர் தங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மையான குடிநீர் வினியோகிக்கப்படுகிறதா? என்பதை தினமும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் ஊராட்சி செயலர்கள் துணை சுகாதார பணியாளர்களுடன் இணைந்து தங்கள் பகுதியில் யாருக்கேனும் காய்ச்சல், இருமல் இருப்பது கண்டறிந்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். குடிநீர் வழங்கும் டேங்க் ஆபரேட்டர்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக குளோரினேசன் செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.

பின்னர் ஒக்கூர் துணை சுகாதார நிலையம், கீழப்பூங்குடி, இடையமேலூர், தமறாக்கி மற்றும் அரசனூர் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி, வட்டார சுகாதார ஆய்வாளர் வீரைய்யா, அரசு சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதாரஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story