மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு தலா ரூ.1 லட்சம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்


மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு தலா ரூ.1 லட்சம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
x
தினத்தந்தி 22 Nov 2020 10:30 PM GMT (Updated: 22 Nov 2020 4:45 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு தலா ரூ.1 லட்சத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

நெல்லை,

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின்படி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 7 மாணவ-மாணவிகள் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். இவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி மற்றும் அ.தி.மு.க. சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அ.தி.மு.க. சார்பில் 7 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார். பின்னர் 19 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் 27 முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா, எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், முருகையா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், கே.ஆர்.பி.பிரபாகரன், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், நெல்லை சந்திப்பு கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, நாங்குநேரி ஒன்றிய அவைத்தலைவர் தளவை சுந்தர்ராஜ், எஸ்.கே.எம்.சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் நன்றி கூறினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் முன்மாதிரியாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி சட்டத்தை இயற்றி உள்ளார். இதன்மூலம் நடப்பு கல்வி ஆண்டில் 313 பேர் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கும், 92 பேர் பல் மருத்துவ படிப்புகளுக்கும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதேபோல் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் அரசே செலுத்தும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அரசாணையும் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு, இந்த சாதனையில் இடம்பெற முயற்சி செய்து வருகிறார். எதிர்க்கட்சியினர் மக்களை குழப்பும் வேலையை செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் வகையில்தான் சென்னை அரசு விழாவில் பேசப்பட்டது.

தமிழக மாணவர்களுக்கு அ.தி.மு.க. அரசும், அ.தி.மு.க.வும் உறுதுணையாக நிற்கும். தற்போது மருத்துவ கலந்தாய்வில் தேர்வான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பகட்ட செலவுக்காக அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் தலா ரூ.1 லட்சம் வழங்கி உள்ளனர். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமியின் அரசு மாணவர்களுக்கு கலங்கரை விளக்காக இருக்கிறது.

தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. இதில் தமிழகத்தில் 4,133 இடங்கள் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 36 மாவட்டங்கள் மற்றும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழையின்போது தான் நமக்கு 47 சதவீதம் தண்ணீர் கிடைக்கிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு இருப்பதால் கூடுதலாக மழைநீர் சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நெல்லை பழைய பேட்டை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story