கோவில்பட்டி-தென்திருப்பேரையில் மாயமானவர்களை கண்டறியும் முகாம் - 2 பேர் அடையாளம் தெரிந்தது


கோவில்பட்டி-தென்திருப்பேரையில் மாயமானவர்களை கண்டறியும் முகாம் - 2 பேர் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 23 Nov 2020 3:45 AM IST (Updated: 22 Nov 2020 11:38 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி மற்றும் தென்திருப்பேரையில் மாயமானவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாயமான 2 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் மாயமானவர்கள் குறித்த நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மாயமானவர்களின் உறவினர்களை அழைத்து சிறப்பு முகாம் கோவில்பட்டி லட்சுமி மஹாலில் வைத்து போலீசாரால் நடத்தப்பட்டது.

துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமை தாங்கினார். முகாமில் பெரிய திரையில் மாநிலம் முழுவதும் அடையாள சொல்ல தெரியாமல் சுற்றித்திரிந்தவர்களின் போட்டோக்கள் மற்றும் இறந்தவர்களின் போட்டோக்கள் ஒளிபரப்பப்பட்டன. இதில், கொப்பம்பட்டி, கழுகுமலை, கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் பதிவான தலா ஒரு மாயமானவர் அடையாளம் காணப்பட்டனர்.

கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஆக்டிவ் மைன்ட்ஸ் தலைவர் தேன்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு செய்தார். பின்னர், மாயமானவர்களின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் 400 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது ஆயுதப்படையில் இருந்து 140 பேர் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவில்பட்டி போலீஸ் உட்கோட்டத்துக்கு மட்டும் 25 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், கோவில்பட்டி கிழக்கு, மேற்கு போலீஸ் நிலையங்களுக்கு மட்டும் 14 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரம் பணியில் இணைவார்கள். மாவட்டத்தில் கயத்தாறு உள்ளிட்ட 15 போலீஸ் நிலையங்கள் வரை தரம் உயர்த்த பரிந்துரைத்துள்ளோம். கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல், கடலையூரில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

ஸ்ரீவைகுண்டம் போலீஸ் உட்கோட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலைய எல்கைப் பகுதியில் மாயமானவர்களை கண்டறியும் முகாம் நேற்று தென்திருப்பேரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள 9 பேரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story