சென்னை அமைந்தகரையில் பரிதாபம்: எறும்புக்கு தீ வைத்த பெண் என்ஜினீயர் பலி
எறும்புகளை அகற்ற மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தபோது உடலில் தீப்பிடித்து கொண்டதால் பெண் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
பூந்தமல்லி,
சென்னை அமைந்தகரை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கீதா (வயது 27).
சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தனது வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தூங்க செல்வதற்கு முன்பு வீட்டில் உள்ள தனது படுக்கை அறையை சுத்தம் செய்தார். அப்போது அங்கு எறும்புகள் அதிகமாக இருந்ததால் அவற்றின் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கையில் வைத்து இருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெய் அவரது உடலில் பட்டதால் குபீரென தீப்பிடித்து உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறினார்.
சங்கீதாவின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம், பக்கத்தினர் சங்கீதா உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
மகளின் உடலில் எரிந்த தீயை அணைக்கும்போது அவரது பெற்றோருக்கும் லேசான தீ காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story