2022-ம் ஆண்டு நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் - கட்சியினருக்கு உத்தவ் தாக்கரே உத்தரவு


2022-ம் ஆண்டு நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் - கட்சியினருக்கு உத்தவ் தாக்கரே உத்தரவு
x
தினத்தந்தி 22 Nov 2020 10:15 PM GMT (Updated: 22 Nov 2020 11:45 PM GMT)

2022-ம் ஆண்டு நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகுமாறு கட்சியினருக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

மும்பை,

மும்பை மாநகராட்சி தேர்தல் வருகிற 2022-ம் ஆண்டு நடைபெற உள்ளது. நாட்டின் பணக்கார மும்பை மாநகராட்சியை சிவசேனா கட்சி கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. எனவே மும்பை மாநகராட்சியை தக்கவைப்பது அந்த கட்சியின் கவுரமாக கருதப்படுகிறது. கடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா, பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருந்த போதும் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. இதில் அந்த கட்சி 82 இடங்களை கைப்பற்றி மயிரிழையில் வெற்றி பெற்றது. பா.ஜனதா 80 இடங்களில் வெற்றிபெற்று மும்பை மாநகராட்சியில் மிகப்பொிய சக்தியாக உருவெடுத்தது.

எனவே வர இருக்கும் தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மாநகராட்சி தேர்தலை சந்திக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் கட்சி நிர்வாகிகள் சிவசேனா மும்பை மாநகராட்சி தேர்தலை தனித்தே சந்திக்க வேண்டும் என விரும்புவதாக தெரிகிறது.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வர்ஷா பங்களாவில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் வர இருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த வார்டு மற்றும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற பகுதிகளில் கவனம் செலுத்தவும் கட்சியினருக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோல கட்சியினர், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தவும், அரசு, மாநகராட்சியுடன் இணைந்து செயல்படவும் கட்சியினரை முதல்-மந்திரி அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில், “மாநகராட்சி தேர்தலை தனித்து சந்திக்க தயாராக இருக்குமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்வதால் மும்பை மாநகராட்சி சிவசேனாவின் பெருமிதம் ஆகும்” என்றார்.

மும்பை மாநகராட்சி தேர்தலுக்காக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கட்சியில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story