வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய பணத்தை கொடுக்காததால் மகனுக்கு முத்தம் கொடுத்துவிட்டு பெண் தற்கொலை முயற்சி - குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு கூறி வீடியோ பதிவு
வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய பணத்தை குடும்பத்தினர் கொடுக்காததால் அவர்கள் மீது குற்றச்சாட்டு கூறி வீடியோ பதிவு செய்து மகனுக்கு முத்தம் கொடுத்துவிட்டு பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அருந்ததிநகர் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா(வயது 30). இவருக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக துபாய், குவைத் ஆகிய நாடுகளில் பாத்திமா வீட்டு வேலை செய்து வந்தார். கணவர் பிரிந்து சென்று விட்டதால், மகனை தனது பெற்றோரிடம் விட்டுவிட்டு பாத்திமா வேலைக்கு சென்று இருந்தார். அவர் கடந்த 5 ஆண்டுகளில் தான் சம்பாதித்த ரூ.9 லட்சத்தை தனது பெற்றோருக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாத்திமா, பெங்களூருவுக்கு திரும்பி இருந்தார். அப்போது, தான் வேலை செய்து அனுப்பி வைத்த ரூ.9 லட்சத்தை தரும்படி பாத்திமா குடும்பத்தினரிடம் கேட்டு உள்ளார். அப்போது பாத்திமாவின் தாய் ரபீகா பேகம், சகோதரர் ஜாபர், சகோதரி ஆயிஷா பானு, ஆயிஷா பானுவின் கணவர் சமீன், இவர்களின் மகன் சையது ஜலீல் ஆகியோர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
மேலும் பணத்தை வழங்காமல் அவர்கள் இழுத்தடித்து வந்து உள்ளனர். இதனால் மனம் உடைந்த பாத்திமா சம்பவம் குறித்து சந்திரா லே-அவுட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். ஆனால் அவரது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பாத்திமா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து நேற்று தனது மகன் நெற்றியில் அன்பு முத்தமிட்ட பாத்திமா, பின்னர் தான் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இந்த காட்சிகளை அவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவில் பேசிய பாத்திமா, எனது குடும்பத்தினர் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ.9 லட்சத்தை தராமல் மோசடி செய்து விட்டனர். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறி இருந்தார். இந்த வீடியோவை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று பாத்திமாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பாத்திமாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சந்திரா லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story