குடகில் ருசிகரம்: திருமண கோலத்தில் வந்து வங்கி போட்டி தேர்வு எழுதிய மணமகள்


குடகில் ருசிகரம்: திருமண கோலத்தில் வந்து வங்கி போட்டி தேர்வு எழுதிய மணமகள்
x
தினத்தந்தி 23 Nov 2020 4:15 AM IST (Updated: 23 Nov 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

குடகில் திருமணம் முடிந்த கையோடு திருமண கோலத்தில் வந்து மணமகள் ஒருவர், வங்கி போட்டி தேர்வு எழுதிய சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா அசோக்புரா கிராமத்தை சேர்ந்தவர் சுவாதி. கல்லூரி படிப்பை முடித்த இவர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் இவருக்கும், சுண்டிகொப்பா அருகே மதிகாமா கிராமத்தை சேர்ந்த சுரேசுக்கும் இருவரின் பெற்றோரும் திருமணத்திற்கு பேசி முடித்திருந்தனர்.

அதன்படி நேற்று சுவாதிக்கு திருமணம் நடந்தது. இதில் சுவாரசியம் என்னவென்றால், சுவாதிக்கு திருமணத்தன்று தான் போட்டித்தேர்வு எழுத வேண்டிய நிலை. இதுபற்றி அவர் தனது கணவர், அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதைதொடர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் சுவாதி, இல்லற வாழ்க்கையில் இணையவும் ஆயத்தமாகி வந்தார். திட்டமிட்டபடி நேற்று காலை 6 மணி முதல் காலை 9 மணிக்குள் சுரேஷ், சுவாதி திருமணம் நடந்தது.

இந்த திருமணம் மடிகேரி டவுனில் உள்ள அம்பேத்கர் பவனில் இருவீட்டார், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. திருமணம் முடிந்தகையோடு மணமகள் சுவாதி, திருமண கோலத்திலேயே போட்டித்தேர்வு எழுதுவதற்காக மடிகேரியில் உள்ள ஜூனியர் கல்லூரிக்கு வந்தார். சக தேர்வாளர்கள் அவரை ஆச்சரியமாக பார்த்தனர்.

பின்னர் சுவாதி தேர்வு எழுதினார். அதன் பின்னர் அவர் தனது கணவர் சுரேசுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து சுவாதி கூறுகையில், நான் கடந்த 9 மாதங்களாக போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்தேன். இந்த நிலையில் எனக்கும், சுரேசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தால் நான் 9 மாதங்களாக பட்ட கஷ்டத்திற்கு பலன் இல்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காக, போட்டி தேர்வு எழுதுவது பற்றி கணவர், மாமியாரிடம் கூறினேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். எனது பெற்றோர் மற்றும் கணவர், குடும்பத்தினர் உதவியுடன் போட்டித் தேர்வை எழுதியுள்ளேன். இந்த தேர்வுக்காக திருமண நிகழ்ச்சிகளை நாங்கள் எளிமையாக, விரைவாக நடத்தி முடித்தோம். போட்டித் தேர்வை சிறப்பாக எழுதியுள்ளேன். வெற்றிபெறுவேன் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

Next Story