சிந்தாமணி அருகே: பெண்ணை கொன்று கற்பழிப்பு; காமக்கொடூரன் கைது - ஆந்திராவை சேர்ந்தவர்


சிந்தாமணி அருகே: பெண்ணை கொன்று கற்பழிப்பு; காமக்கொடூரன் கைது - ஆந்திராவை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 23 Nov 2020 3:00 AM IST (Updated: 23 Nov 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

சிந்தாமணி அருகே பெண்ணை கொன்று கற்பழித்த ஆந்திராவை சேர்ந்த காமக்கொடூரனை போலீசர் கைது செய்தனர்.

சிக்பள்ளாப்பூர்,

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா கோனாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் கடந்த 19-ந்தேதி தனது தோட்டத்தில் நிலக்கடலை அறுவடை செய்ய சென்றிருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், அந்த பெண்ணை தேடி தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்கு அரை நிர்வாண நிலையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

சம்பவம் பற்றி பட்டலஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, கொலையான பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப் பரிசோதனையில் அந்த பெண்ணை யாரோ கற்பழித்ததும், கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை பிடிக்க தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த நிலையில் கோனாப்பூர் கிராமத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், வாலிபர் பெயர் கே.என்.சங்கரப்பா (வயது 28) என்பதும், ஆந்திராவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் திருமணமான இவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்றதும், அதன் பின்னர் வேலைக்காக அவர் கோனாப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் கூலிவேலைக்கு சென்ற சங்கரப்பா, விளைநிலத்தில் நிலக்கடலை செடிகளை அறுவடை செய்து கொண்டிருந்த பெண்ணை பார்த்துள்ளார். அவர் மீது சபலம் கொண்ட சங்கரப்பா, அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண், அவரை கண்டித்துள்ளார். மேலும் சங்கரப்பாவை அவர் தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சங்கரப்பா, அந்த பெண்ணை கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து காமபோதை தலைக்கேறிய நிலையில் சங்கரப்பா, இறந்துபோன பெண்ணை பல தடவை கற்பழித்ததாக தெரிகிறது. அதன் பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார் சங்கரப்பாவை பிடித்து விசாரித்த போது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது.

இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு கைதான சங்கரப்பாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story