அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் - நாராயணசாமி நம்பிக்கை


அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் - நாராயணசாமி நம்பிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2020 4:00 AM IST (Updated: 23 Nov 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி,

புதுவையில் உள்ள தனியார் மருத்துவகல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 சதவீத இடங்களை பெற வேண்டும் என்பது தொடர்பாக சட்ட வரையறை தயார் செய்து அமைச்சரவையில் முடிவு செய்து மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் ஒப்புதல் கொடுத்த பின்னர் அதனை சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுவோம். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் மத்திய அரசு, ஜனாதிபதியின் அனுமதியோடு தான் சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்ற முடியும்.

மறுபடியும் அது மத்திய அரசின் உத்தரவுக்கு செல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்து வருகிறோம். ஆனால் ஒரு சிலர் விவரம் தெரியாமல் நாங்கள் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற நடவடிக்கை எடுக்கவில்லை என்று தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக புதுவை மாநில மக்களுக்கு விளக்கி கூற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ளது. இதற்கு ஒப்புதல் பெற நானும், அமைச்சர்களும் டெல்லி சென்று மத்திய உள்துறை செயலாளரை சந்தித்து பேசினோம். அவரும் ஒப்புதல் அளிப்பதாக கூறினார். இந்த கோப்பை மருத்துவத்துறைக்கு அனுப்ப வேண்டும். அடுத்த வாரத்தில் மருத்துவத்துறை அனுமதி அளிக்கும் என்று நம்புகிறேன். அதன்பின்னர் இது நடைமுறைப்படுத்தப்படும். புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு உறுதியாக கிடைக்கும்.

ஆனால் கவர்னர் காலதாமதம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த காலங்களில் பிராந்திய இட ஒதுக்கீட்டை அரசாணை மூலம் நடைமுறைப்படுத்தியுள்ளோம். ஆனால் கவர்னர் கிரண்பெடி தற்போது தேவையில்லாமல் கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து காலதாமதப்படுத்துகிறார். இதனால் பாதிக்கப்படுவது அரசுப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தான். அவர்களுக்கு உதவி செய்ய நாங்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்தால் கவர்னர் அதை காலதாமதப்படுத்துகிறார். அரசு பள்ளி மாணவர்களின் கனவை நனவாக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story