கொரோனாவுக்கு பின் களை கட்டிய கடற்கரை: வெளியூர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


கொரோனாவுக்கு பின் களை கட்டிய கடற்கரை: வெளியூர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 23 Nov 2020 3:45 AM IST (Updated: 23 Nov 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்குக்கு பின் புதுச்சேரியில் வெளியூர் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடற்கரை களை கட்டியது.

புதுச்சேரி,

கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. புதுவை கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுவைக்கு தற்போது வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர்.

புதுவையில் நேற்று மிதமான வானிலை நிலவியது. காலை முதல் கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பாரதி பூங்காவில் மக்கள் குவிந்தனர். சிறுவர்கள் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் ஏறி விளையாடி மகிழ்ந்தனர்.

தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் பலர் குடும்பத்துடன் கடலில் இறங்கி அலைகளில் கால்களை நனைத்து மகிழ்ந்தனர். புதுவை கடற்கரை சாலையை ஒட்டிய தெருக்களில் வரைந்து வைத்துள்ள ஓவியங்களின் முன்பு நின்று இளைஞர்கள், இளம்பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தாவரவியல் பூங்கா நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இது பலருக்கு தெரியாததால் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அங்கு வந்தவர்கள் உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் பொதுமக்களிடம் பூங்கா ஊழியர்கள் அறிவுறுத்தினர். உல்லாச ரெயிலில் சிறுவர்கள், பெரியவர்கள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

இதேபோல் நோணாங்குப்பத்தில் உள்ள படகு குழாமில் நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் கூட்டத்தை நேற்று காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். பாரடைஸ் பீச்சுக்கு சென்று கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

புதுவை காந்திவீதியில் சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை பேரம் பேசி வாங்கிச் சென்றனர். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. எனவே கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஒலிபெருக்கி மூலம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story