மாந்தோப்பு சுந்தர் கொலைக்கு பழிவாங்க காங்கிரஸ் பொதுச் செயலாளரை கொல்ல முயன்றோம் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
மாந்தோப்பு சுந்தர் கொலைக்கு பழிவாங்க காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரை கொலை செய்ய முயன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி,
புதுவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் முதலியார்பேட்டை வயல்வெளி நகரில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த 19-ந்தேதி இரவு காரில் சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து கார் மீது கல்வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றது. இந்த சம்பவத்தில் ஏ.கே.டி.ஆறுமுகம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சேது, ஆனஸ்ட்ராஜ், ஆனந்த், பிரேம், ரூபன், நரேஷ், கோகுல், அஜய் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் சரத்குமார் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாந்தோப்பு சுந்தர் கொலை செய்யப்பட்டார். இதில் ஏ.கே.டி. ஆறுமுகத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் கருதினோம். எனவே நாங்கள் அனைவரும் சேர்ந்து மாந்தோப்பு சுந்தர் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஏ.கே.டி. ஆறுமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டோம். அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இருக்காது. எனவே அங்கு வைத்து எளிதாக திட்டத்தை நிறைவேற்றலாம் என்று முடிவு செய்தோம். இதற்கான நாங்கள் ஏற்கனவே அங்கு சென்று பதுங்கி இருந்து ஒத்திகை பார்த்தோம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நாங்கள் அங்குள்ள புறவழிச்சாலையில் பதுங்கி இருந்தோம். அப்போது ஏ.கே.டி. ஆறுமுகத்தின் கார் வந்தது. நாங்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றி வளைத்து கற்களை வீசினோம். பின்னர் 2 நாட்டு வெடிகுண்டுகளை அவரது காரின் மீது வீசினோம். ஆனால் நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்காமல் காரில் விழுந்து துள்ளி அருகில் உள்ள புதரில் விழுந்தது. பின்னர் அரிவாளால் வெட்டினோம். அவரது கார் டிரைவர் நிற்காமல் சென்று விட்டதால் அவர் உயிர் தப்பினார். பின்னர் நாங்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டோம். போலீசார் எங்களை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து முதலியார்பேட்டை போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள புதர்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. அவற்றை போலீசார் கைப்பற்றி பாதுகாப்பாக போலீஸ் நிலையம் எடுத்துவந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story