வாய்மேடு அருகே சோகம்: ஒரு மாதத்துக்குள் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 பெண் குழந்தைகள் அரசு உதவ கோரிக்கை


வாய்மேடு அருகே சோகம்: ஒரு மாதத்துக்குள் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 பெண் குழந்தைகள் அரசு உதவ கோரிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2020 7:38 AM IST (Updated: 23 Nov 2020 7:38 AM IST)
t-max-icont-min-icon

ஒரு மாதத்துக்குள் பெற்றோரை இழந்து 2 பெண் குழந்தைகள் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாய்மேடு, 

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த சிறுதலைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது35.) இவர் சைக்கிளில் சென்று மீன் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவருடைய மனைவி ராணி(32). இவர்களுக்கு முத்தரசி(5), சர்வேஸ்வரி(4) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் 16-ந்தேதி மாரியப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.இதனால் தந்தையை இழந்த இரண்டு பெண் குழந்தைகளும், தாய் ராணி அரவணைப்பில் இருந்து வந்தனர்.

தந்தையை இழந்த சோகத்தில் இருந்த குழந்தைகளுக்கு மேலும் பேரிடியாக தாய் ராணியும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 12-ந்தேதி உயிரிழந்தார். ஒரு மாதத்துக்குள் பெற்றோரை இழந்து முத்தரசி, சர்வேஸ்வரி ஆதரவு இன்றி நிற்கதியாக உள்ளனர்.

தற்போது 2 பெண் குழந்தைகளும் அடுத்த வேலை உணவுக்கே கஷ்டப்பட்டு வரும் மாரியப்பனின் சகோதரர் குமார் மனைவி மாரிமுத்துவின் வீட்டில் உள்ளனர்.

இதுகுறித்து குழந்தைகளின் பெரியம்மா மாரிமுத்து கூறுகையில், நான் மீன் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். அடுத்த வேலை உணவுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன்.

மீன் வியாபாரத்தில் கிடைக்கும் குறைந்த வருமானத்தை கொண்டு எனது குழந்தைகளை வளர்க்க அவதிப்பட்டு வரும் நிலையில் தாய், தந்தையை இழந்த முத்தரசி, சர்வேஸ்வரி ஆகியோரை வளர்க்க மிகவும் சிரமப்படுகிறேன். எனவே பெற்றோரை இழந்து தவித்து வரும் 2 பெண் குழந்தைகளுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்றார்.

Next Story