ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகளை தீவிரமாக ஆராய்ந்து அவர்களை கண்டறியும் வகையில் சிறப்பு முகாம் நடத்த காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகளை மறுஆய்வு செய்து அதன்மூலம் புதிய தகவல்களை பெற்று காணாமல் போனவர்களை கண்டறிய சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேசியஸ், ராமநாதபுரம் வெள்ளைத்துரை உள்ளிட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர்.
முகாமில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 துணை போலீஸ் உட்கோட்ட அளவில் இதுவரை காணாமல் போனவர்கள் குறித்து புகார் செய்தவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரை வரவழைத்து அவர்களிடம் காணாமல் போனவர்கள் குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து புகார் அளித்த பின்னர் இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் தகவல் தெரிந்ததா? வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு வந்து சென்றார்களா, வேறு எந்த பகுதியிலாவது பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக தெரிகிறதா, வேறு மாநிலங்களுக்கு சென்றிருக்கிறார்களா என்பதுபோன்ற தகவல்களை அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தனர்.
புகார் தெரிவித்தபோது தெரிவிக்க மறந்த தகவல்கள், இடைப்பட்ட காலத்தில் கிடைத்த தகவல்கள் போன்றவை காணாமல் போனவர்களை கண்டறிய பயன்படும் என்பதால் துருவி துருவி விசாரித்தனர். தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 445 வழக்குகள் இதுதொடர்பாக உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 176 பேர் காணாமல் போனது தொடர்பாக 159 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போதைய இந்த விசாரணையின் அடிப்படையில் திரட்டப்பட்ட தகவல்களை கொண்டு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் காணாமல் போனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன்மூலம் இதுகுறித்த வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தெரிவித்தார். முகாமில் கலந்து கொண்டவர்கள் போலீசாரிடம் புதிய தகவல்களை தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் தனிப்படையினர் விசாரணையை தொடங்க உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story