டிரைவரை தாக்கி ஆட்டோ கடத்தல்: ஆட்டோ சங்க தலைவர் உள்பட 3 பேர் கைது
வந்தவாசியில் டிரைவரை தாக்கிவிட்டு, ஆட்டோவை கடத்திச்சென்ற சம்பவத்தில் ஆட்டோசங்க தலைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வந்தவாசி,
வந்தவாசி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மஸ்தான், ஆட்டோ டிரைவர். இவருக்கும் ஆட்டோ சங்க தலைவரான நஜீர்கான் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்த போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மஸ்தானிடம், உத்திரமேரூர் செல்ல வேண்டும் என அழைத்துள்ளனர். அதன்பேரில் அவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். மங்கநல்லூர் கூட்ரோடு அருகே சென்றபோது திடீரென ஆட்டோவில் இருந்த 2 வாலிபர்களும் ஆட்டோ சங்க தலைவரிடமா மோதுகிறாய் என மஸ்தானை மிரட்டி, மது பாட்டில் மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கி அவரை கீழே தள்ளிவிட்டு ஆட்டோவை கடத்திச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மஸ்தான் அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பான புகாரின்பேரில் வந்தவாசி துணைபோலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், வடக்கு இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அணைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு காஞ்சீபுரம் - விளாங்காடு ரோட்டில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன், காஞ்சீபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்த தரணிதரன் என்பது தெரியவந்தது.
மேலும் ஆட்டோ சங்க தலைவர் நஜீர்கான் கேட்டுக்கொண்டதன்பேரில், மஸ்தானை தாக்கிவிட்டு அவரது ஆட்டோவை கடத்தியதாககூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், ஆட்டோ சங்க தலைவர் நஜீீீர்கானையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story