மீன்சுருட்டியில் பள்ளி எதிரே உள்ள பாழடைந்த கிணற்றை மூட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
மீன்சுருட்டியில் பள்ளி எதிரே உள்ள பாழடைந்த கிணற்றை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வந்தனர். பின்னர் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் பிரிக்கப்பட்டு புதிதாக பெண்கள் மேல்நிலைப்பள்ளி திறக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த பள்ளியின் எதிரில் அரசால் வெட்டப்பட்ட சுமார் 30 அடி ஆழமுள்ள கல் கிணறு ஒன்று உள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கிணற்றில் இருந்து தான், அந்த காலத்தில் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வருபவர்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த பகுதியில் உள்ள ஓட்டல்காரர்கள், மாட்டு வண்டியில் பேரல்கள் மூலம் தண்ணீர் எடுத்து சென்றனர்.
இந்த பகுதியின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருந்த இந்த கிணற்றில் இருந்து பெண்கள் ஒரே நேரத்தில் 2, 3 குடங்களில் தண்ணீர் எடுத்து சுமந்து செல்வார்கள். மேலும் இந்த பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் குடிக்கவும், தட்டுகள் கழுவவும் கிணற்று தண்ணீரை பயன்படுத்தியதோடு, குடிநீருக்காக வகுப்பு அறையில் பானைகளில் தண்ணீரை எடுத்து வைத்து பயன்படுத்தினர். ஆனால் நாளடைவில் ஆழ்துளை கிணறுகள், குடிநீர் தொட்டிகள் மூலம் கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்ட பின்னர், கிணறுகளில் தண்ணீர் எடுப்பதை பொதுமக்கள் நிறுத்திக்கொண்டனர். நீண்ட காலமாக பயன்படுத்தாத நிலையில் பள்ளி எதிரே உள்ள கிணறு பாழடைந்துவிட்டது.
மேலும் தற்போது இந்த பகுதியில் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கிணற்றின் அருகே இருந்த பள்ளிக்கூட கட்டிடங்கள் இடிக்கப்பட்டு சாலை விரிவாக்கத்திற்காக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த கிணறு இன்னும் மூடப்படாமல் அப்படியே இருந்து வருகிறது. இந்த கிணற்றின் அருகே போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 மாத காலமாக கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கவில்லை. மேலும் போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள் இந்த பகுதியில் தான் விளையாடி வருகின்றனர். இந்த பகுதியில் குழந்தைகள் விளையாடும்போது, கவனக்குறைவாக இந்த கிணற்றில் விழுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் இந்த கிணற்றை மூட வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story