விராலிமலை அருகே தொழிலதிபரிடம் ரூ.2½ லட்சத்திற்கு விற்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு - இடைத்தரகர் கைது
விராலிமலை அருகே தொழிலதிபரிடம் ரூ.2½ லட்சத்திற்கு விற்கப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டு, இடைத்தரகரையும் கைது செய்தனர்.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா வேலூர் பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் ஹாஜீமுகமது(வயது 32). சமையல் கலைஞர். இவரது மனைவி ஆமீனாபேகம்(26). இவர்களுக்கு திருமணமாகி 2 பெண், 1 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆமீனாபேகத்திற்கு 4-வதாக பெண்குழந்தை பிறந்தது. இவர்களின் வறுமையை அறிந்த அதே பகுதியை சேர்ந்த இடைத்தரகரான கண்ணன்(58) என்பவர் இவர்களிடம் நீங்கள் வறுமையில் உள்ளீர்கள், ஆதலால் குழந்தையை உங்களால் வளர்க்க இயலாது. எனவே குழந்தை இல்லாதவர்களிடம், குழந்தையை விற்று விடலாம் என கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் கண்ணன், ஆமீனாபேகத்தையும், குழந்தையையும் காரில் அழைத்துக்கொண்டு ஈரோடு அருகே உள்ள சித்தோடுக்கு சென்றுள்ளார். அங்கு அவருடன் பழக்கத்தில் இருந்த புவனா(36) என்பவருடன் சேர்ந்து ஆமீனாபேகத்தை காரிலேயே இருக்க வைத்துவிட்டு, குழந்தையை மட்டும் எடுத்து சென்றார். பின்னர் குழந்தையை ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்த புவனா, கண்ணன் ஆகிய இருவரும் ஆமீனாபேகத்திடம் ரூ.1 லட்சத்தை கொடுத்தனர். பின்னர் ஆமீனாபேகம், கண்ணன் ஆகிய 2 பேரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
இதைதொடர்ந்து குழந்தை விற்கப்பட்டது தொடர்பாக கடந்த 19-ந் தேதி புதுக்கோட்டை சைல்டு லைன் அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சைல்டு லைன் அமைப்பினர், ஆமீனாபேகத்தை அழைத்துக்கொண்டு விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து குழந்தையை மீட்டு தருமாறு புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் குழந்தையையும், இடைத்தரகரான கண்ணனையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை விராலிமலை அருகே உள்ள இனாம் குளத்தூர் ரெயில்வேகேட் அருகே வைத்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவை சேர்ந்த தொழிலதிபரான சின்னதம்பி கவுண்டர் மகன் சிவராஜ்(42) என்பவரிடம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு குழந்தையை விற்றதாகவும், அதில் ரூ.1 லட்சத்தை மட்டும் ஆமீனாபேகத்திடம் கொடுத்ததாகவும், போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவிநாசிக்கு சென்று குழந்தையை மீட்ட போலீசார் நேற்று மாலை சைல்டு லைன் அமைப்பினர் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள புவனாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண் குழந்தையை மீட்க துரிதமாக செயல்பட்ட விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமயிலான சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story