அந்தியூர் அருகே மர்மமாக இறந்த ஆண் குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு - தாசில்தார் முன்னிலையில் பிரேத பரிசோதனை


அந்தியூர் அருகே மர்மமாக இறந்த ஆண் குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு - தாசில்தார் முன்னிலையில் பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 23 Nov 2020 6:28 AM GMT (Updated: 23 Nov 2020 6:28 AM GMT)

அந்தியூர் அருகே மர்மமாக இறந்த ஆண் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து, தாசில்தார் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி காலனியை சேர்ந்தவர் பவித்ரா (வயது 24). இவர் முதல் கணவரை பிரிந்து 2-வதாக மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக இருந்த பவித்ராவுக்கு, கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு பவித்ரா நேற்று முன்தினம் பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தையின் உடலை வீட்டு பின்புறம் புதைத்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர், குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கும், சென்னம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தமிழ்செல்வியிடமும் புகார் கொடுத்தார்கள். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பவித்ராவிடம் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்தியூர் தாசில்தார் மாரிமுத்து, பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி, பெருந்துறை மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் நந்தகுமார், சங்கர் ஆகியோர் நேற்று மதியம் 1.30 மணி அளவில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்றனர்.

குழந்தையின் தாய், தந்தை மற்றும் உறவினர்களும் உடன் சென்று, குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை காண்பித்தனர். இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் குழந்தையின் உடலை பணியாளர்கள் தோண்டி எடுத்தனர்.

பின்னர் டாக்டர்கள் நந்தகுமார், சங்கர் ஆகியோர் குழந்தையின் உடலை அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பிறகு குழந்தையின் உடல் தோண்டிய இடத்தில் மீண்டும் புதைக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, ‘குழந்தையின் உடற்கூறுகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மருத்துவ பரிசோதனை ஆய்வறிக்கை ஓரிரு நாட்களில் வந்துவிடும். அதை வைத்துதான் குழந்தை எப்படி இறந்தது? என தெரியவரும்’ என்றனர்.

Next Story